Sunday, January 12, 2025
Homeஉள்ளூர்வலி.வடக்கில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் திருக்குறள் வளாகம்!.

வலி.வடக்கில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் திருக்குறள் வளாகம்!.

வலி.வடக்கு மாவிட்டபுரத்தில் மிகப் பிரமாண்டமாக தயாராகின்றது திருக்குறள் வளாகம்.

1330 குறள்களையும் என்றும் அழியாத வகையில் கருங்கற்களில் செதுக்கி
அதனை நம் சமூகத்திற்கு வழங்கும் அரிய முயற்சியாக இந்த திருக்குறள் வளாகம் அமைந்துள்ளது.

திருக்குறள் பற்றி வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து ஆராச்சிகள் மற்றும் ஆய்வுகள் செய்வதற்கு வசதியாக, பிரத்தியேகமாக பல வசதிகள் இந்த அரண்மனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மனதை ஒருநிலைப்படுத்தும் தியானத்தின் மகத்துவத்தை தற்கால நம் சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இங்கு தியான மண்டபம் அமைக்கப்படுகின்றது.

திருக்குறள் தொடர்பாக பல மொழிகளில் வெளிவந்த புத்தகங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் என பல நூறு புத்தகங்கள் இந்த அரண்மனையில் வைக்கப்படவுள்ளது.

பல கோடி ரூபா பெறுமதியில் நிர்மாணப் பணிகள் முழு வீச்சில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் 02.02.2025ம் திகதி இந்த பிரமாண்டமான திருக்குறள் வளாகம் திறந்து வைக்கப்படுகின்றது.

திருக்குறள் மீது அளவற்ற நேசத்தை கொண்டுள்ள இந்தியாவின் புகழ்பூத்த மாண்புமிகு நீதியரசர் விருந்தினராக கலந்து சிறப்பித்து இதனை திறந்து வைக்கவுள்ளார்.

தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த ஒரு நூல் தமிழர்க்கு. வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு நூல் என போற்றப்படும் திருக்குறள் பற்றிய மேன்மையினை,

நம் எதிர்கால சந்ததியினருக்கும் பிற மொழி பேசுகின்ற வேற்று நாட்டவர்களுக்கும் எடுத்துச் சொல்லும் வகையில்,

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் பெரு முயற்சியின் பயனாக இந்த திருக்குறள் வளாகம் வலி வடக்கு மண்ணில் அமைகின்றது.

ஆன்மீக பூமியான மாவிட்டபுரத்தில் மாவைக் கந்தவேள் பெருமானின் திருத்தலத்திற்கு அருகில் அமைவது மேலும் சிறப்பை பெறுகின்றது.

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள் ஆகும்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனிதர்களின் வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

இந்நூல் அறம், பொருள், இன்பம், ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் முப்பால் எனப் பெயர் பெற்றது.

முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் இயல் என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை.

இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
குறள் வெண்பாக்களால் ஆனமையால் ‘குறள்’ என்றும் திருக்குறள் என்றும் இது பெயர் பெற்றது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்

திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது.

இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நேற்று (11) சிவபூமி திருக்குறள் வளாகத்திற்கு  கருங்கல்லினால் அமையப்பெற்ற திருவள்ளுவரின் ஆறு அடி திருவுருவச் சிலை எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>கனேடிய அமைச்சரை சந்தித்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments