சிங்கத்தின் குகையில் அரசோச்சிய புலிக்குரல்.
‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’
என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து. 25 ஆண்டாகிவிட்டது. அவரின் நினைவுகளை ஒரு கணம் மீட்டுப் பார்ப்போம்.
05.01.2000 அன்று கொழும்புநகரில், அவரது மோட்டார் வண்டிக்குள் வைத்து, கயவன் ஒருவன் தன் கைத்துப்ப்பாக்கியை இயக்கி, ஐந்து குண்டுகளை அனுப்பி குமார் பொன்னம்பலத்தில் உயிரைக் குடித்தான்.
சிங்களப்பேரினவாதிகளின் தமிழர் விரோதக் கருத்துகளுக்கு சுடச்சுட, ஆணித்தரமணா பதில்களை வழங்கி, எதிர்வாதம் புரிந்த தமிழீழ தேசப் பற்றாளர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்தவுடன் அவரது இழப்பிற்கு அவர்கள் இரங்கல் தெரிவித்தும், அவரின் போராட்டப் பங்களிப்பை நினைவுகூர்ந்தும் தமிழர் தொடர்பூடகங்கள் அஞ்சலி செலுத்தி, அவரைக் கெளரவப்படுத்தின. தமிழீழத்திலும், புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் அவருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. படையினரின் தொல்லைகளையும் அசட்டை செய்துவிட்டு ஆயிரக்கணக்கில் கொழும்பு நகரில் திரண்ட தமிழர்கள் அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலியைத் தெரிவித்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக குமார் பொன்னம்பலத்தின் துணிச்சலான போராட்டப்பங்களிப்பை புகழ்ந்து பேசிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “மாமனிதர்” என்ற அதியுயர் விருதை அவருக்கு வழங்கி, அன்னாரின் தேசிய சேவையை கெளரவித்து, அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பேரினவாதத்தின் மைய நிலத்தில் வசித்தபடி தமிழ் மக்களுக்கெதிரான அரச பயங்கரவாதச் செயல்களை அம்பலப்படுத்துவதிலும், தமிழினத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதிலும் மாமனிதர் குமார் எல்லோரையும் முந்திக் கொள்வார்.
சிங்களத்தின் அரசியல்வாதிகள் மற்றும் தொடர்பூடகவியலாளர்கள் தமிழினத்திற்கு எதிராக இனவாதம் கக்கினால் அவற்றிற்கெதிராக கர்ணகடூர மொழியில் பதிலுருத்து, சிங்களப் பேரினவாதத்தின் சித்தாந்தத் தளத்தைச் சிதைக்கும் வகையில் தனது கருத்துக் குண்டுகளை, குமார் பொன்னம்பலம் வீசியெறிவார்.
அத்துடன், இனவெறிச்சட்டங்களால் சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிப்பதற்காக தனது சட்டத்தொழிலின் பெரும்பகுதி நேரத்தை அர்பணிப்புணர்வுடன், அவர் செலவிடுவார். தமிழ் அரசியல் கைதிகளில் 95 வீதமானோரின் வழக்குகளை குமார் பொன்னம்பலம் கையாண்டார். இதற்காக எதுவித கட்டணங்களையும் அறவிடாது இலவசமாகப் பணிசெய்தார். அதைத் தனது கடமை என்று வர்ணித்தார்.
இத்தகைய தமிழின சேவைக்காக குமார் பொன்னம்பலத்தைத் தண்டிக்க பேரினவாதிகள் பலதடவைகள் முயன்றனர்.
ஆனால், குமார் பொன்னம்பலம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, தனது செயற்பாடுகளை அவர் தீவிரப்படுத்தி பதிலடி கொடுத்தார்.
சட்டத்திற்கு புரம்பானவகையில் தமிழர்களைத் தொல்லைப்படுத்தும் ‘பாஸ்’ நடைமுறை மற்றும் அடையாள அட்டைகளுடன் உலாவ வேண்டும் என்ற படையினரின் உத்தரவுகளை தான் நேரடியாகச் சந்திக்கும்போது அவற்றிக்குப் பணிய மறுத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு சட்டரீதியாகச் சவால்கள் விடுத்தார்.
புறச்சூழலின் நெருக்கடிகள் – கொலைப் பயமுறுத்தல்களைப் பற்றிக் கவலைப்படாமல் சொல்லவேண்டியவற்றை – சொல்லவேண்டிய இடத்தில் – சொல்வேண்டுமென்ற மனத்துணிவு, இந்த மனத்துணிவை செயலாகமாற்றும் வீரம் குமார் பொன்னம்பலத்திடம் இருந்தது.
தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாடுகளில் பணிசெய்துவிட்டு கொழும்பு திரும்பும்போது,
இலங்கை அரசின் துரோகத்தின் சதியால் சுட்டுகொல்லப்பட்டு மாமனிதர் காற்றில் கலந்த ஸ்ரீலங்காவின் தலைநகரம்.
விமான நிலையத்தில் வைத்து சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்துவதை பொறுமையுடன் அனுமதிப்பார். அதிகாரிகள் தேடும் ஆவணங்களை பயணப்பெட்டிக்குள் வைத்துக்கொண்டுவரும் முட்டாள் நானில்லை என்று கூறி, அந்த ஆவணங்களை சேரவேண்டிய இடத்திற்கு சேரவேண்டிய வழிமுறையில் அனுப்பிவைக்கும் விஞ்ஞான வழிமுறைகள் உண்டென்ற சாதாரண அறிவுகூட சோதனைபோடுபவர்களுக்கு இல்லையென்று துணிச்சலுடன் கேலிபேசி அவமதிப்புக்குப் பதிலடியாகச் சொல்லடிகள் கொடுத்து அவற்றை பத்திரிக்கைகளுக்கு அனுப்பியும் வைப்பார்.
இலங்கை அரசின் துரோகத்தின் சதியால் சுட்டுகொல்லப்பட்டு மாமனிதர் காற்றில் கலந்த ஸ்ரீலங்காவின் தலைநகரம்
ஆயுதப்போராட்டத்தின் பிறப்புப்பற்றியும், அதன் தவிர்க்க முடியாத தேவை பற்றியும் உலகப் பிரமுகர்களுக்கும் விளக்குவார். தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அம்பலபப்டுத்தி, அவற்றை சர்வதேச மனித உரிமைக் கழகங்களிடம் எடுத்துச் செல்வார்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் போராட்டத்திற்கு ஆற்றவேண்டிய பங்களிப்புகள் பற்றி விளக்குவார். பேரினவாதிகளின் இனவாதக் கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களை அளிப்பார். எமது இனத்தின் அறிவுஜீவிகளுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்திள்ள திரு. குமார் பொன்னம்பலம் சிங்களப் பேரினவாதிகளுடன் மட்டுமன்றி பேரினவாதத்திற்கு ஏவல் செய்யும் தமிழ்க்குழுக்களுக்கும் எதிராகவும் அவர் காட்டமானவகையில் தனது எதிர்புணர்வைக் காட்டியுள்ளார்.
* கனடா வாழ் தமிழீழ மக்களால் “மாமனிதர்” குமார் பொன்னம்பலம் நினைவாக தபால் முத்திரையும் வெளியீடபப்ட்டது.
தமிழீழ தாயக விடுதலைக்காக அரசியல் ரீதியாக களமாடி உயிர் நீத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.