2025 ஆம் ஆண்டு அபிவிருத்தியின் பொருத்தமான கிராமத்தை தெரிவு செய்தலும் முன்னுரிமைப்படுத்தலும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலகங்களில் இருந்தும் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தேறாங்கண்டல் கிராம சேவையாளர் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் குறித்த வேலைத்திட்டமானது நேற்றைய தினம் (03) துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.ரமேஸ் தலைமையில் தேறாங்கண்டல் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
தேறாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் அதிகளவான மக்களின் பங்களிப்புடன் ஆரம்ப கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் முக்கியமாக வீதி போக்குவரத்து, விவசாயம், கல்வி, வாழ்வாதாரம், காணி, அடிப்படை வசதிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக எவ்வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் இருக்கின்றன என்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்தன.
குறித்த விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களுடைய தேவைகள் அபிலாசைகளை தெரிவித்ததோடு ஒவ்வொரு துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் தங்களுடைய கருத்துக்களை கூறியிருந்தார்கள்.
இந்தக் கலந்துரையாடலில் துணுக்காய் பிரதேச செயலாளர் ,உதவிப் பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், காணி பயன்பாட்டுப் பிரிவு உத்தியோகத்தர், கலாச்சார உத்தியோத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், காணிக்கிளை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோத்தர்கள், கிராம அலுவலகர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திட்டமிடல் கிளை உத்தியோகத்தர்கள்,
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பிரதேச சபையின் அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி, கால்நடை வைத்திய அதிகாரி, அதிபர், கமலநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள்,
வனவள திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், தேறாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவினை சேர்ந்த கிராமமட்ட அமைப்புகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்>முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்!