வவுனியா வடக்கு – ஒலுமடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் காணியை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிக்கவும், ஆலய வளாகத்தில் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் ரவிகரன் வலியுறுததியுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (27) நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக வெடுக்குநாறி மலையில மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை வெடுக்குநாறிமலை அமைந்துள்ள பகுதி தற்போது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே, ஆலய வளாகம் வனவளத் திணைக்களத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.
மேலும், இந்த ஆலயத்தில் இனந்தெரியாதவர்களால் விக்கிரகங்கள் திருடப்பட்டிருந்தன. பின்னர், நீதிமன்ற அனுமதியுடன் ஆலய விக்கிரகங்கள் ஆலய நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
இந்நிலையில் மலை உச்சியிலுள்ள சிவலிங்கத்தின் மேலாக ஏற்கனவே இருந்ததைப் போல சிறிய அளவிலான பாதுகாப்புக் கூடாரம் அமைப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகள் மேற்கொண்டபோது தடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
எனவே அங்கு பாதுகாப்புக் கூடாரம் அமைக்கவும் அனுமதி வழங்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்