வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் நிதி மோசடி செய்வதாகத் தெரிவித்து அது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ததன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் இந்த நிதி மோசடிகளை செய்துள்ளனர்.
குறிப்பாக என்னைப் போன்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஜப்பான், தென்கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் வாட்ஸ்அப் மூலம் இந்த மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதற்காக அவர்களுடன் கைத்தொலைபேசி மூலம் வீடியோ அழைப்பை ஏற்படுத்தி எனது குரலிலும் உரையாடியுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுடான சந்திப்பு எனும் தலைப்பில் இணையவழி கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
எனவே நாட்டு மக்களும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் இவ்வாறான நிதி மோசடிகளில் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்