வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும்
‘கரைஎழில்’ நூல் வெளியீடும் கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,
கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப் போர் ஆரம்பமானது.
இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்தது.
அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன்.
எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது.
ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம்.
இன்றைய இளையோர்களிடம் மற்றவர்களை மதிக்கும், உதவி செய்யும் பண்புகளைக் காண முடியவில்லை.
தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கிறது.
வீதிகளில் குப்பை போடுகிறோம்.
வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுகின்றோம்.
ஒழுக்கமில்லாத சமுதாயமாக நாங்கள் மாறிக்கொண்டு போகின்றோம்.
விழா மண்டபத்தை இந்தப் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக நிரப்பிக்கொண்டிருப்பதாக பிரதேச செயலரும், மாவட்டச் செயலரும் என்னிடம் சொன்னார்கள்.
உண்மையில் வேதனையாக இருக்கிறது.
எமது பிரதேசத்தின் பண்பாட்டு விழாவுக்கு பெருமளவினர் வருவதில்லை.
ஆனால் குத்துப்பாட்டுக்களுடன் நடக்கும் நிகழ்வுகளுக்கு அள்ளுகொள்ளையாக செல்கிறார்கள்.
ஏனையவர்களுக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது.
ஆனால், இன்று எம்மில் பலர் பணம்தான் சந்தோஷம் என்று நினைக்கிறார்கள்.
பணம் சந்தோஷத்தை தராது. ஒருவனுக்கு நாங்கள் உதவி செய்தால் எங்களுக்கு பல மடங்கு பல்வேறு வழிகளில் திருப்பி உதவி கிடைக்கும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்யவேண்டும்.
அதேபோல எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன.
மற்றையவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்தவேண்டும்.
அத்துடன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு ஆசிரியர்களை அவரிடம் அனுப்பினேன்.
அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார்.
ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார்.
இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்> யாழில் டெங்கு காய்ச்சலினால் இதுவரை 91 பேர் பாதிப்பு!