எமது நாட்டின் அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
கொழும்பில்; உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.
மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அத்துடன் அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என தெரிவித்துள்ளார்