தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
குறித்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டதாகவும் ஊடகங்களும் அதை தான் சொன்னதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லையெனவும் தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம் நிரம்பி வழியத் தொடங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன் பலன் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தாரா? முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வந்தாரா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆனால் நாம் வந்ததாகவும் தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லையெனவும் யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 27,000 வாக்குகள் கிடைத்ததாகவும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் அது எமக்கு மிகப்பெரியது எனவும் தெற்கில் நாம் வேலை செய்தளவுக்கு வடக்கில் வேலை செய்யவில்லையென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் 30 வருடங்கள் தொடர்ச்சியான யுத்தம் நிகழ்ந்தது. எமது பரம்பரை யுத்தத்தில் ஈடுபட்டது. சிங்கள தமிழ் முஸ்லிம் இடையே உள்ள சந்தேகம் கோபத்தை முற்றாக ஒழித்து தேசிய மக்கள் சக்தியாக முன்னேறுவோம்.
எமது ஆட்சியில் சில சந்தேகங்கள் இருக்கலாம். படிப்படியாக அந்த சந்தேகங்கள் நீங்கும். உங்கள் பிரச்சினைகள் தீரும். எல்லோரும் தமது மொழியில் கதைத்து தமது கலாசாரத்தை பின்பற்றும் நிலையை உருவாக்குவோம்.
தற்போதும் மூடியிருந்த பாதையை திறந்து வைத்தோம். அதுக்கு திறப்பு விழா வைத்தோமா? திறப்பதற்கு வைபவங்கள் தேவையா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அது மக்களின் உரிமை. வேறு யாரும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் மூடியவரே விழா வைத்து திறந்திருப்பார்.
படிப்படியாக உங்கள் காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரமாக வாழ அனைவருக்கும் உரிமை உண்டு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.