மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் குவித்த அபார சதத்தின் உதவியுடன் அவுஸ்திரேலியா பலமான நிலையில் இருக்கிறது.
அவுஸ்திரேலியா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 474 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று மோசமான நிலையில் இருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மீதம் இருக்க 310 ஓட்டங்களால் இந்தியா பின்னிலையில் இருக்கிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா எஞ்சிய 4 விக்கெட்களில் மேலும் 163 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்டீவன் ஸ்மித், அணித் தலைவர் பெட் கமின்ஸ் ஆகிய இருவரும் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 112 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
தனது 113ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஸ்டீவன் ஸ்மித் 34 சதத்தைப் பூர்த்தி செய்து 140 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.
அவர் இதுவரை மொத்தமாக 9949 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய அவருக்கு மேலும் 51 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
பெட் கமின்ஸ் 49 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 99 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 78 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆகாஷ் தீப் 94 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
அணித் தலைவரும் ஆரம்ப வீரருமான ரோஹித் ஷர்மா 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
கே. எல். ராகுல் 24 ஓட்டங்களுடன் வெளியேற இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 51 ஓட்டங்களாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட முயற்சித்தனர்.
ஆனால், ஜய்ஸ்வால், விராத் கொஹ்லி, ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இந்தியா மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
யஷஸ்வி ஜய்ஸ்வால் 82 ஓட்டங்களையும் விராத் கோஹ்லி 36 ஓட்டங்களையும் பெற்றனர். ஆகாஷ் தீப் ஓட்டம் பெறவில்லை.
ஆட்ட நேர முடிவில் ரிஷாப் பான்ட் 6 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 பேர்டிகள் கொண்ட போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1 – 1 என சமநிலையில் இருக்கிறது.
முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்றன.
இதையும் படியுங்கள்>மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடிய இந்திய மகளிர் அணி!