கொழும்பு கோட்டை நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 2026 ஜனவரி 28 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.
நேற்று (29-11) நடைபெற்ற விசாரணையில், கோட்டை நீதவான் இஸுரு நெத்திக்குமாரா குற்றப்புலனாய்வு துறைக்கு (ஊஐனு) விசாரணையை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் பணித்தார்.
மேலும், கடந்த விசாரணை நாளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே நடந்த சம்பவங்கள் நீதிமன்ற அவமதிப்பாக இருக்குமா எனவும், அதற்கு பொறுப்பான நபர்கள் யார் எனவும் விசாரித்து, அடுத்த விசாரணை நாளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் ஊஐனு-க்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மதியம் 1.30 மணியளவில் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் குற்றச்சாட்டுகளின்படி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2023 ஆம் ஆண்டு தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பாராட்டுச் சடங்கில் பங்கேற்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் இவ்வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி குற்றப்புலனாய்வு துறைக்கு சென்று வாக்குமூலம் அளித்தபின் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் அவரின் மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்கபுரா, ஆகஸ்ட் 26 அன்று அவரை ஒவ்வொன்றும் ஐந்து மில்லியன் ரூபாய்க்கு மூன்று பேரின் பிணையுடன் விடுதலை செய்து, வழக்கை நேற்று மீண்டும் அழைக்க உத்தரவிட்டிருந்தார்.

