புத்தளத்தின் மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாத்தாண்டிய பகுதியில் நேற்று (22-07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கியால் சூடு செய்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 30 வயதுடைய பெண் உயிரிழந்ததுடன், 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், உயிரிழந்த பெண் முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிநைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும், அவரது கணவரும் அதேவகை வழக்கில் சிறையில் உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது தாயாரும் ‘குடு மாலி’ என்ற புனைப்பெயரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு போதைப்பொருள் கடத்தலைக் கொண்ட தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தில் ஒரு கைத்துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகளை சிலாபத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் ஐந்து பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

