உக்ரைனில் உடனடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நோக்கில், அமெரிக்க நிதித்துறை (U.S. Treasury Department) ரஷ்யாவின் மிகப் பெரிய இரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது.
‘இப்போது கொலைகளை நிறுத்தி உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது,’ என அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெஸ்சென்ட் (Scott Bessent) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பெஸ்சென்ட் கூறியதாவது: ‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தேவையானால் மேலும் நடவடிக்கைகளை எடுக்கத் தயார் நிலையில் உள்ளது. அதேவேளையில், எங்கள் நட்பு நாடுகளும் இந்தத் தடைகளில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள Rosneft மற்றும் தனியார் உரிமையில் இயங்கும் டுரமழடை ஆகியவை ரஷ்யாவின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் நிறுவனங்களாகும். இவை இணைந்து ரஷ்யாவின் மொத்த மூல எண்ணெய் ஏற்றுமதியின் கிட்டத்தட்ட பாதியை வழங்குகின்றன. Bloomberg மதிப்பீட்டின்படி, இவ்விரு நிறுவனங்களும் இவ்வாண்டின் முதல் பாதியில் தினசரி சுமார் 2.2 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளன.
வெள்ளை மாளிகையில் புதன்கிழமை பேசிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘இப்போது இதற்கான சரியான நேரம் என்று நினைத்தேன். இந்தத் தடைகள் நீண்ட காலம் நீடிக்காது என நம்புகிறேன், ஏனெனில் ரஷ்யா–உக்ரைன் மோதல் விரைவில் தீர்வடையும் என எதிர்பார்க்கிறேன்,’ என்றார்.
இந்த நடவடிக்கை, ஹங்கேரியில் திட்டமிடப்பட்டிருந்த டிரம்ப்–புடின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதற்குப் பின்னர் எடுக்கப்பட்டது.
‘அந்த சந்திப்பில் தேவையான முடிவை அடைய முடியாது என தோன்றியதால், அதை ரத்து செய்தேன்,’ என டிரம்ப் விளக்கம் அளித்தார்.
2022 பிப்ரவரியில் ரஷ்யா–உக்ரைன் மோதல் வெடித்ததிலிருந்து, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பல்வேறு கட்டங்களாக ரஷ்யாவுக்கு எதிராக நிதி மற்றும் வர்த்தகத் தடைகள் விதித்து வருகின்றன.

